காஞ்சிபுரத்தில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவிலைப் பார்த்து வியந்த ராஜராஜ சோழன், இதேபோன்று தனது தலைநகரில் மிகப்பெரிய கோவிலைக் கட்ட விரும்பினான். ஆன்மிக குருவிடம் ஆலோசனை பெற்றான். கோவில் கட்டுவதற்கான இடத்தைத் தேடிச்சென்றபோது, ஒரு வராகம் (பன்றி) வழிமறித்து உறுமிக்கொண்டே வந்தது. அதனைக் கொல்ல முயன்றபோது, அது போக்குக் காட்டியபடி சென்று, ஓரிடத்தில் நின்று சத்தமாக உறுமியது. பின்னர் மும்முறை காலால் தரையைத் தட்டி மறைந்தது. அரண் மனை ஜோதிடர் கருத்துப்படி, வராகம் தரையைத் தட்டிய இடமே கோவில் கட்ட முடிவானது.
திட்டமிட்டபடி, ராஜராஜ சோழனின் 19-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி 1003- 1004) திருப்பணிகள் துவக்கப்பட்டு, 25-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1009- 1010) கோவில் கட்டிமுடிக்கப்பட்டது. எதிர்பார்த்தவாறு நல்லபடியாகக் கோவில் கட்டப்பட்ட மகிழ்ச்சியில் மாமன்னன் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது அவன் கனவில் சிவபெருமான் தோன்றினார். பூரிப்படைந்த மன்னன், "எம்பெருமானே! அடியேனுக்குத் தாங்கள் தரிசனம் தந்தது பெரும் பாக்கியம். தங்களுக்கு எடுப்பித்த கோவில் எப்படியுள்ளது? "தஞ்சைப் பெரியகோவில்' என்று பெயர்சூட்ட விரும்புகிறேன். மகிழ்ச்சிதானே தங்களுக்கு?' என்றான் ஆனந்தமாக. இறைவன் சிரித்துக் கொண்டே, "ஆம்; மகிழ்ச்சிதான். ஓர் இடைச்சியின் நிழலிலில் ஆனந்தமாக இருக்கிறோம்!' என்று கூறவும், கனவு கலைந்தது.
தாம் கண்ட கனவுக்கான விளக்கத்தை அமைச்சர்களிடம் கேட்டான்; எவருக்கும் தெரியவில்லை. கோவில் சிற்பியிடம் கேட்டபோது, அவர் தயங்கியபடி ""அரசே!
மூன்று மாதங்களாக, மோர் விற்கும் ஓர் ஏழை மூதாட்டி தினமும் மதியவேளை இங்கு வருவார். தான் கொண்டுவரும் மோரை கோவில் பணிசெய்யும் எங்களுக்கு இலவசமாகத் தருவார். "ஏதோ... இந்த ஏழை இடைச்சியால் இந்தக் கோவிலுக்குச் செய்யமுடிந்த தொண்டு' என்று கூறி, நாங்கள் கொடுத்த காசை வாங்க மறுத்துவிட்டாள்.
ஒரு நாள், கருவறை மேலிருக்கும் கல்லை சரிசெய்யமுடியாமல் வருத்தத்தில் இருந்தோம். அப்போது மோர் கொண்டுவந்த மூதாட்டி, "ஏன் கவலையாக இருக்கிறீர்கள்?' என்று கேட்க, விஷயத்தைச் சொன்னோம்.
அதற்கு "என் வீட்டு வாசலில் பெரிய கல் ஒன்றுள்ளது. அதை வேண்டுமானால் பொருத்திப் பாருங்களேன்' என்றார்.
நாங்களும் அந்தக் கல்லை எடுத்துவந்து வைத்தோம். என்னே ஆச்சரியம்! கருவறையின் மேற்கூரைக்கு அளவெடுத்து வைத்ததுபோல மிகச்சரியாக இருந்தது. அதைத்தான் இறைவன் தங்களுக்கு உணர்த்தியிருப்பார் என்று எண்ணுகிறேன்'' என்றார்.
சிற்பியின் பதிலைக் கேட்டு ராஜராஜ சோழன் பெருமகிழ்ச்சி கொண்டான். பிறகு, ""கும்பாபிஷேக நாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்துவாருங்கள். நான் வெண்குடை ஏந்தி, அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். இந்தக் கோவிலைக் கட்டியது அந்த மூதாட்டிதான்; நானல்ல! இதற்கு இறைவனே சாட்சி'' என்று கூறினான். அதன்படி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விமானத்தில் இடம்பெற்றிருந்த 80 டன் எடை கொண்ட கல்லிலில் "அழகி' என்ற அந்த மூதாட்டியின் பெயர் பொறிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.
போர்த்திறமையால் உலகின் பல நாடுகளை வென்ற ராஜராஜ சோழன், தமிழர்களின் கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழும் பெரிய கோவிலைக் கட்டியதன்மூலம் உலகமக்கள் அனைவரின் இதயங்களையும் வென்றுவிட்டான்.
உலக அதிசயச் சின்னமான இந்தக் கோவிலிலுள்ள சிவலிங்கத்தின் உயரம் 12 அடியாகும். இது தமிழ்மொழியின் உயிர் எழுத்துகள் 12-ஐக் குறிப்பதாக உள்ளது. சிவலிங்கம் அமைந்துள்ள பீடத்தின் உயரம் 18 அடியாகும். இது மெய்யெழுத்துகள் 18-ஐக் குறிக்கிறது. விமானத்தின் உயரம் 216 அடி. இது உயிர்மெய் எழுத்துகள் 216-ஐக் குறிப்பது. சிவலிலிங்கத்திற்கும் நந்திக்குமிடையேயுள்ள தூரம் 247 அடி. இது தமிழ் மொழியின் மொத்த எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாக உள்ளது. தமிழ் மன்னன், தமிழ் இறைவன் சிவபெருமானுக்குத் தமிழால் எடுப்பிடித்த கோவில் இது!
பிரமிடுபோல் கட்டப்பட்டுள்ள தஞ்சைப் பெரியகோவில், கற்களை அடுக்கியும், கோர்த்தும் "இலகு பிணைப்பு' முறையில் (கயிற்றுக் கட்டில்போல) கட்டப்பட்டு, கோள்களின் கதிர்வீச்சுகள் அதன் மையப்பகுதியில் குவியுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
உலகப் பாரம்பரியச் சின்னமான தஞ்சைப் பெரியகோவிலுக்கு 1997-ல் குடமுழுக்கு செய்விக்கப்பட்டது. அதன்பின் 23 ஆண்டுகள் கழித்து 5-2-2020, புதன்கிழமை காலை 9.23 மணிக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகப் பூர்வாங்கப் பணிகள் தொடங்கிய நாள்முதல் கும்பாபிஷேகம் வரை ஐந்து நாட்கள் சுமார் 13 லட்சம் பக்தர்கள் பெருவுடையாரை தரிசித்தனர். கும்பாபிஷேகத்தை சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஓதுவார்களும், சிவாச்சாரியார்களும் தேவாரம், திருவாசகம் பாடியும் மந்திரங்கள் கூறியும் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர்.
அப்போது "ஓம் நமசிவாய' என்று, கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய பஞ்சாட்சர மந்திரம் கயிலையையே அதிரச்செய்தது. அனைவரும் பக்தியில் திளைத்து இறையருளில் லயித்தனர்.
-கி. ஸ்ரீமுருகன்